
மாராங், ஜனவரி-2 – திரங்கானு, மாராங் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கடத்த உதவியதாக கூறப்படும் 32 வயது வழக்கறிஞரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, தனது கட்சிக்காரருக்கு அவ்வாறு உடந்தையாக இருந்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
சம்பவத்தன்று வழக்கமான சோதனையின் போது கைதியின் உடலில் சந்தேகத்திற்குரியப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், யாபா மாத்திரைகள், கஞ்சா மற்றும் எரிமின்–5 உள்ளிட்ட போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவை சுமார் 16,000 ரிங்கிட் மதிப்புடையவை என்றும், சுமார் 800 போதைப் பித்தர்கள் உட்கொள்ளும் அளவில் இருந்ததாகவும் திரங்கானு போலீஸ் தலைவர் கூறினார்.
இதையடுத்து கைதான வழக்கறிஞர் விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதில் சம்பந்தம் இருப்பதாக நம்பப்படும் ஓர் இல்லத்தரசியும் தேடப்பட்டு வருகிறார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



