மூசாங் கிங் டுரியான் விலை RM15–RM35 வரை சரிவு; மிதமிஞ்சிய கையிருப்பை வாங்க முன்வந்த FAMA

கோலாலம்பூர், ஜனவரி-4,
பழங்களின் அரசனான மூசாங் கிங் டுரியான் விலை இப்பருவத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் சரிந்துள்ளது.
வழக்கமாக அதிக விலைக்கு விற்கப்படும் இந்த மூசாங் கிங் டுரியான் பழங்கள், தற்போது கிலோவுக்கு வெறும் RM15 முதல் RM35 வரை கிடைக்கின்றன.
மிகுந்த விளைச்சலால் சந்தையில், தேவைக்கும் அதிகமான டுரியான்கள் குவிந்துள்ளதே இதற்கு காரணமாகும்.
பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் மூசாங் கிங்கை சுவைக்க பயனீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆனால் டுரியான் பழத் தோட்டக்காரர்களுக்கோ, அதிக விளைச்சலை நிலையான வருமானத்துடன் சமநிலைப்படுத்தும் சவால் தொடருகிறது.
இந்த அதிகப்படியான பழங்களைச் சமாளிக்க, கூட்டரசு விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்தல் வாரியமான FAMA நேரடியாக விவசாயிகளிடமிருந்து டுரியான்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சந்தை நிலைமை சீராகும், பழங்கள் வீணாவது தவிர்க்கப்படும், மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



