
கோலாலம்பூர், ஜன 29- மார்ச் 1 முதல், வெளிநாட்டினர் மானிய விலையில் சமையல் எண்ணெய் பொட்டலங்களை ஒவ்வொன்றும் 2 ரிங்கிட் 50 சென்னுக்கு வாங்குவதற்கு தடை விதிக்கப்படும்.
1961 ஆம் ஆண்டின் விநியோகச் சட்டத்தின் பிரிவு 6 இன் விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் இந்தத் தடை செயல்படுத்தப்படும் என உள்நாடு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஷான் முகமட் அலி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்ட விதிகள் அமலாக்கத்திற்கு முன் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
பொட்டலத்தில் அடைக்கப்பட்ட மான்ய விலையைக் கொண்ட சமையல் எண்ணெய் மீதான வெளிநாட்டினரின் கொள்முதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இதற்கு முன் எழுந்தன. எனினும் சில்லறை விற்பனையாளர்கள், கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் தொடர்பான நடைமுறைக் கவலைகளை எழுப்பியிருந்ததை அர்மிஷன் சுட்டிக்காட்டினார்.
இதற்கான கொள்முதலை குடிமக்களின் அடையாள அட்டை விவரங்களுடன் இணைப்பதன் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தடையை திறம்பட செயல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.



