
சுங்கை பாக்காப், ஏப்ரல்-10, பினாங்கு சுங்கை பாக்காப்பில் பிப்ரவரி 18-ம் நாள் ஏற்பட்ட ஒரு கோர சாலை விபத்து, 2 இளம் உடன்பிறப்புகளின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
பாட்டியின் மோட்டார் சைக்கிளில் காலையில் பள்ளி செல்லும் வழியில் 7 வயது தர்ஷன் முருகனும், 5 வயது கவர்ஜிதா முருகனும் படுகாயம் அடைந்தனர்.
வாட்டமான இடது கையில் தசை முழுவதையும் இழந்து அதனைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு அண்ணன் தர்ஷன் தள்ளப்பட்ட வேளை, தங்கை கவர்ஜிதாவின் வலது கால் முட்டிக்குக் கீழே துண்டிக்கப்பட்டது.
அன்றிலிருந்து அக்குடும்பத்துக்கு குறிப்பாக அவ்விரண்டு சிறார்களுக்கும் உற்றத் துணையாக இருந்து வருகிறார் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம்.
ஆனால், முழுமையாக குணமடையாததால், 2 மாதங்களாக அவ்விருவராலும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
இதனால் பிள்ளைகள் கல்வியில் பின்தங்கி விடுவார்களே என்ற அக்கறையில் Dr லிங்கேஷ் , வீட்டுக்கே வந்து பிள்ளைகளுக்குப் பாடங்களைச் சொல்லித் தர ஆசிரியை ஒருவரை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், தமிழ் ஆகிய 5 பாடங்களை அவர் படித்துக் கொடுப்பார்.
வாரத்திற்கு 3 முறை, ஒவ்வொரு முறையும் ஒருவருக்கு ஒன்றரை மணி நேரங்கள் என்ற அடிப்படையிலும் இந்த பிரத்யேக டியூஷன் ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.
அவ்வகுப்புக்கான கட்டணச் செலவை முதல் 6 மாதங்களுக்கு Dr லிங்கேஷே ஏற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிறார்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது, எல்லையில்லா நிறைவைத் தந்தது.
அதோடு அவர்களின் பாட்டியும் ஆரத்தழுவி நன்றித் தெரிவித்தது Dr லிங்கேஷை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பெரும் சோதனையில் சிக்கினாலும், மீண்டும் கல்வி கற்கப் போவது குறித்து குழந்தைகள் உற்சாகத்தில் மூழ்கினர்.
அதைப் பார்த்த தமக்கும் மனநிறைவாக இருந்தது என, அவர் சொன்னார்.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நாம் மற்றவர்களுக்குச் செய்யும் சிறு சிறு உதவிகளும் பெரிய விஷயமாகும்.
அவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்த்து நெகிழ்ந்துபோன Dr லிங்கேஷ், அவர்களின் வாழ்க்கைக் கதையில் தாமும் ஓர் அங்கமாக இருப்பது குறித்து மனநிறைவுத் தெரிவித்தார்.