
புது டெல்லி, மார்ச்-11 – மியன்மார் நாட்டின் மோசடி மையங்களிலிருந்து மீட்கப்பட்டு, தாய்லாந்து வழியாக சுமார் 300 இந்தியப் பிரஜைகள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அவர்களில் 266 பேர் ஆண்கள்; 17 பேர் பெண்கள் ஆவர்.
இந்திய அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மேலும் 257 பேர் அடுத்து மீட்கப்படவுள்ளனர்.
பெரும்பாலும் சீன நாட்டவர்கள் நடத்தி வரும் அந்த சட்டவிரோத இணைய மோசடி மையங்களைத் துடைத்தொழிக்கும் சோதனைகளில், இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த
7,000 தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் சீனப் பிரஜைகள், மியன்மார்-தாய்லாந்து எல்லையில் மோசமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட தனது பிரஜைகளை சீனா குற்றவியல் சந்தேக நபர்களாகக் கருதி, வந்தவுடன் அவர்களை கைவிலங்கிட்டு வருவதே அதற்குக் காரணம்.
ஏற்கனவே 2,000க்கும் மேற்பட்ட தனது பிரஜைகளை மீட்டுள்ள சீனா, பலவீனமான சட்ட அமுலாக்கம் கொண்ட மியன்மார் எல்லைப் பகுதிகளில் இந்த மோசடி கும்பல்களை முறியடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பில்லியன் டாலர் தொழில்துறையின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மையங்கள், காதல் மற்றும் முதலீட்டு மோசடிகள் உள்ளிட்ட இணைய மோசடிகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஏமாற்றி கொண்டு வருகின்றன.
கைநிறைய சம்பளம் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பி இந்த வேலைகளில் ஈர்க்கப்பட்ட ஏராளமான வெளிநாட்டவர்கள், கடைசியில் அங்கு சித்ரவதைக்கு ஆளாகி வருவது அம்பலமாகியுள்ளது.