
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14– மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வசமாக சிக்கிய போலி பல் மருத்துவர் ஒருவர் தன் தவற்றை உணர்ந்து திருந்தாமால், பூச்சோங்கில் மீண்டும் சட்டவிரோத பல் சிகிச்சை ஒன்றைச் செய்ததை மலேசிய சுகாதார அமைச்சு (KKM) கண்டறிந்துள்ளது.
25 வயதான அந்த இந்தோனேசியப் பெண், நாட்டில் சட்டபூர்வ ஆவணங்கள் இன்றி வசிப்பதோடு, பல் மருத்துவர் உரிமம் இல்லாமல் பல் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
நேற்று சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை, குடிநுழைவுத்துறையுடன் இணைந்து பூச்சோங் அழகு நிலையத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் அம்மாது கைது செய்யப்பட்டார்.
இவர் பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்கு 70 ரிங்கிட் முதல் 400 ரிங்கிட் வரை பணம் வசூலித்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையின் போது பல்வேறு பல் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பல் மருத்துவச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், கடந்த ஜூன் மாதம் ஷா ஆலமில் உள்ள பிரிவு 18 இல் உள்ள அழகு மையத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத பல் சிகிச்சை செய்ததும் சுகாதார அமைச்சால் கண்டு பிடிக்கப்பட்டது.