
கோலாலாம்பூர், பிப்ரவரி-4-இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுவதால், மலேசியாவை முக்கியமான வட்டார வியூகப் பங்காளியாக இலங்கை பாராட்டியுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தில் இன்று நடைபெற்ற இலங்கையின் 78-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அப்பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழிலாளர் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கை–மலேசியா இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக, மலேசியாவுக்கான இலங்கையின் இடைக்கால உயர் ஆணையர் M.I. Mohamed Rizvi கூறினார்.
இவ்விழாவில் இலங்கை சமூகத்தினர், புலம்பெயர் இலங்கையர்கள் மற்றும் மலேசியர்கள் என சுமார் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் வாழும் இலங்கை குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தொழிலாளர் மற்றும் நலவாரியப் பிரிவுகள் மூலமாக உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்னைகளைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் Rizvi தெரிவித்தார்.
அதே சமயம் மலேசியாவில் பணிபுரிய விரும்பும் இலங்கை பிரஜைகள் சட்டப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சட்டவிரோத முகவர்கள் அல்லது மனிதக் கடத்தல் கும்பல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல், மலேசியாவில் தற்போது கல்வி பயின்று வரும் சுமார் 4,000 முதல் 5,000 இலங்கை மாணவர்களுக்கும் அவர் ஆலோசனைக் கூறினார்.
அவர்கள், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் மூலமே அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், மோசடி கும்பல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், விசா விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



