
கோலாலம்பூர், ஜூலை-22- மே 1 முதல் அமுலுக்கு வந்த முட்டை மானியக் குறைப்பைத் தொடர்ந்து, அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 45 மில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி மானியம் முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்பு, இந்த 3-மாத கால மானியக் குறைப்பின் மூலம் 135 மில்லியன் ரிங்கிட் வரை சேமிப்பாகுமென, அவர் மக்களவையில் கூறினார்.
குறைக்கப்பட்ட மானியச் செலவினங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற சேமிப்பு மற்றும் முட்டை சந்தை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவில் அதன் தாக்கம் குறித்து தேசிய முன்னணியைச் சேர்ந்த பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் பூசி ஷேக் அலியின் (Sheikh Puzi Sheikh Ali) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
கோழி முட்டைகளின் விநியோகம் சீராகவும், விலைகள் நியாயமாகவும் இருப்பதாகவும் மாட் சாபு சொன்னார்.
ஜூலை மாதத்தில் மட்டும், முட்டை உற்பத்தி 1.75 பில்லியன் முட்டைகளை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது; அதே நேரத்தில் உள்நாட்டு பயனீடு 1.06 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 0.69 பில்லியன் முட்டைகள் உபரியாக இருப்பதைக் குறிக்கிறது; அவற்றில் சில ஏற்றுமதி செய்யப்படும் என்றார் அவர்.
எது எப்படி இருப்பினும், முட்டை விநியோகம் மற்றும் விலை நிர்ணயத்தில் தொடர்ச்சியான நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்காக, தமதமைச்சும் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் இணைந்து, நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் மாட் சாபு கூறினார்.