மும்பையில் ஆம்புலன்ஸ் வண்டி குலுங்கியதில் ‘இறந்தவர்’ உயிர் பிழைத்த அதிசயம்
மும்பை, ஜனவரி-6 – இந்தியா, மும்பையில் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்ட ஒரு முதியவர், உயிர் பிழைத்த அதிசயம் வைரலாகியுள்ளது.
டிசம்பர் 16-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாண்டுரங் உல்பே (Pandurang Ulpe) எனும் 65 வயது அம்முதியவர்.
அவர் மரணமடைந்து விட்டதை மறுத்துவர்கள் உறுதிப்படுத்தியதால், ‘உடலை’ அம்புலன்ஸ் வண்டியிலேற்றி குடும்பத்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
இறப்பு செய்தி கேட்டு உறவினர்களும் துக்கம் விசாரிக்க பாண்டுரங் வீட்டில் கூடி விட்டனர்; இறுதிச் சடங்குகளுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்தன.
இந்நிலையில், வீட்டுக்குச் செல்லும் வழியில் அம்புலன்ஸ் வண்டி சாலை வேகக் தடையை கடந்த போது குலுங்கியதில், பாண்டுரங்கின் கை விரல்கள் அசைந்தன.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி, உடனடியாக ஓட்டுநருக்குத் தகவல் தெரிவிக்க, மற்றொரு மருத்துவமனைக்கு அவர் கொண்டுச் செல்லப்பட்டார்.
அங்கு ஆஞ்சியோ பிளாஸ்டி (angiplasty) எனப்படும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டு, 15 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்றார்.
2 வார சிகிச்சைக்குப் பிறக்கு டிசம்பர் கடைசியில் பாண்டுரங் வீடு திரும்பினார்.
உயிரோடு இருக்கும் போதே இறந்து விட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனை அலட்சியமாக இருந்திருப்பதாக ஒரு பக்கம் புகார் எழுந்தாலும், வேகத் தடை மட்டும் இல்லாதிருந்தால் பாண்டுரங்கனை அடக்கம் செய்திருப்போமே என குடும்பத்தார் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.