
முழுக்க முழுக்க கருங்கல்லில் மறுகட்டுமானம் காணும் செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்
செந்தூல், பிப்ரவரி-7,
நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் கோவில், முழுக்க முழுக்க கருங்கல் கொண்டு மறுபடியும் கட்டப்படவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்த மறுகட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
நேற்று நடைபெற்ற பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு, விரைவிலேயே பாலஸ்தாபனம் நடைபெறும் என, ஆலயத் தலைவர் சுரேந்திரன் சந்திர சேகரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு கோயில் சூழலைப் போன்று இங்கேயும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருங்கல் ஆலயத்தைக் கட்ட முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.
கட்டடப் பணிகள் நடைபெற்றாலும் காளியம்மன் சிலை மாற்றப்படாது; ஆனால் பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மூடப்படும்.
அடுத்த 2 ஆண்டுகள் கோவிலில் எந்தவித திருவிழாக்களும் நடைபெறாது என சுரேந்திரன் சொன்னார்.
ஆலயத்தில் வாகன நிறுத்துமிடப் பிரச்னை குறித்தும் அவர் கருத்துரைத்தார்.
திருப்பணிக்கு 5 மில்லியன் ரிங்கிட் வரை செலவாகலாம் என்றும் பக்தர்களின் ஒத்துழைப்பையும், நன்கொடைகளையும் எதிர்பார்ப்பதாகவும் சுரேந்திரன் கூறினார்.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அதனை அன்னதான வடிவில் கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் சிறப்பு வருகைபுரிந்த வேளை, சுற்று வட்டார மக்களும் பக்தர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
கட்டுமானத்திற்குப் பிறகு செந்தூல் மகா காளியம்மன் புதுப்பொலிவுடன் காட்சி தருவதைக் காண பக்தர்கள் ஆவலோடு காத்திருப்பர் என்பது நிச்சயம்.



