
கோலாலாம்பூர், நவம்வர் 18-அவசர பதிலளிப்புச் சேவை எண்ணான MERS999-க்குப் பதிலாக அடுத்தத் தலைமுறை அவசர சேவை எண் என்ற பெயரில் NG999 அமுலுக்கு வந்துள்ள நிலையில், அது முழுமையாக செயல்படவில்லை என பரவலாகப் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக அவசர அழைப்புகள் சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
NGO அம்புலன்ஸ் சேவைகள் நேரடி அழைப்புகளை தொடர்ந்து பெறுவதால் பெரும் சுமையைச் சந்திக்கின்றன; தவிர, ஒரே இடத்துக்கு இரண்டு அரசு அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இது வளங்களை வீணாக்கும் நடவடிக்கை என, மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறினார்.
இதற்கிடையில், தேசிய டிஜிட்டல் துறை உருவாக்கிய SaveME 999 செயலியும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பதிவுச் செய்யும் செயல்முறை சிக்கலானது, MyDigital ID இணைப்பு இல்லை, மேலும் பயோமெட்ரிக் அம்சம் செயல்படவில்லை என பல்வேறு புகார்களைத் தாம் பெற்றிருப்பதாக லிங்கேஷ்வரன் சொன்னார்.
பாதுகாப்பு என்பது சமரசம் செய்யக்கூடிய விஷயம் அல்ல.
எனவே, கோளாறுகளை உடனடியாக சரிசெய்து, வெளிப்படையாக விளக்கமளிப்பதுடன் பலவீனங்களைக் கண்டறிய முழு தணிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்றார் அவர்.
இந்நிலையில், SOS அழைப்பு 999 அழைப்பைப் போல எளிதாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கூடுதல் பதிவுத் தேவையில்லாத அதே சமயம் மேலும் பாதுகாப்பான Apple, Google, Huawei போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, விவேகக் கைப்பேசிகளில் உள்ள SOS அம்சத்தை அரசாங்கம் பயன்படுத்த பரவலாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



