கோலாலம்பூர், பிப்ரவரி-7 – முஸ்லீம்கள் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க முஸ்லீம்களுக்கு முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களை, அமைச்சரவை இரத்துச் செய்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை உறுதிப்படுத்தினார்.
முஸ்லீம்கள் தங்கள் வரம்புகளை அறிந்திருப்பதால் இந்த உத்தேச வழிகாட்டுதல்கள் தேவையற்றவை என்றார் அவர்.
“இன்று நான் பத்து மலைக்கு வருகைத் தந்தேன்; ஆனால் அவர்களின் மத நிகழ்வில் நான் பங்கேற்கவில்லை. இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூட அடிக்கடி அவர் தொகுதியில் உள்ள மசூதிக்குச் செல்வார், ஆனால் அவர் மத நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை” என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
இது மலேசியர்களின் தினசரி வாழ்க்கையில் சாதாரணமாக நடக்கக் கூடியது; எனவே மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கும் அளவுக்கு விஷயங்களை சிக்கலாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் சொன்னார்.
எனவே, சர்ச்சைக்குரிய அந்த உத்தேச வழிகாட்டிகளை அமைச்சரவை இரத்து செய்ததை தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக, பத்து மலையில் செய்தியாளர் சந்திப்பின் போது டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
அது இனி ஒரு பிரச்னையாக இருக்காது எனக் கூறியப் பிரதமர், அமைச்சரவையின் அம்முடிவு விரைவிலேயே துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரின் ஷாவின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என்றார்.
இஸ்லாம், கூட்டரசின் அதிகாரப்பூர்வ மதம் என்றாலும், மலேசியா ஒரு பல்லின – மத நாடு; எனவே, நாட்டின் நிர்வாகம் ஒவ்வொரு சமூகத்தின் தேவைகளையும் விருப்பங்களையும் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, அமைச்சரவையின் உத்தரவின் பேரில் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சும், தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன.
அதாவது, இது போன்ற விவகாரங்களில், இஸ்லாமிய சமய மேம்பாட்டுத் துறையான JAKIM, முஸ்லீம்களுக்கு ஆலோசனையை வழங்கலாம்; ஆனால், அதுவே அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாகி விடாது.
மேலும், இனி எந்தவொரு கொள்கையும் வரையப்படுவதற்கு முன், தேசிய ஒற்றுமை அதில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்; அதோடு அமுலுக்கு வரும் முன்பு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டுமென அதில் கூறப்பட்டது.
சில தினங்களாக நிலவிய சர்ச்சைகளுக்கு முருகன் சன்னதியில் அதுவும் தைப்பூச நேரத்தில் பிரதமர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.