
கோலாலம்பூர், டிசம்பர் 23-ஒரு மூத்த இராணுவ அதிகாரியை உட்படுத்திய பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டுகள் குறித்து
அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளுக்கு தற்காப்பு அமைச்சு காத்திருக்கிறது.
முடிவுகள் வெளியான பிறகே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அவ்விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்றும்,
பொதுவெளியில் பரவியக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்
முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது என்றும் அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பணம் புகுந்திருப்பதாக, சமூக ஆர்வலர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அது குறித்து கருத்துரைத்த போதே அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
இந்நிலையில், விசாரணை நடைபெறும் வரை பொது மக்கள் யூகங்களையும் குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில்,தேவையான முழு தகவல்கள் கிடைத்தால் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தெரிவித்துள்ளது.



