பெய்ஜிங், செப்டம்பர் -15 – வாடிக்கையாளர் வாங்கிய மூன் கேக்கில் (Moon Cake) மனித பல் இருந்ததையடுத்து,
சீனாவில் பிரபலமான அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டான Sam’s Club விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
இடை-இலையுதிர் கால விழா அல்லது அறுவடை விழாவான Mid-Autumn Festival-லுக்கு சீனர்கள் தயாராகி வரும் நிலையில், கிழக்கு சீனாவின் Jiangsu மாநிலத்தில் செப்டம்பர் 5-ல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
4 டாலருக்கு தான் வாங்கிய இறைச்சி நிரப்பப்பட்ட மூன் கேக்கில், உடைந்த மனித பல் இருந்தது கண்டு அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
அப்பல் வீட்டில் உள்ளவர்களுடையது அல்ல என்பதை உறுதிச் செய்து கொண்டு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து மூன் கேக் தயாரிப்பு நிறுவனமும் உள் விசாரணையை மேற்கொண்டுள்ளது.
இறைச்சி மசாலா தயாரிக்கப்படும் போது X ரே கருவியின் மூலம் scan செய்யப்படுகிறது; எனவே பல் இருந்திருந்தால் நிச்சயம் அப்போதே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என அந்நிறுவனம் கூறியது.
மூன் கேக் தயாரிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் விசாரணைக்காக அதிகாரத் தரப்பிடம் அது கொடுத்துள்ளது.
இந்த Sam’s Club சூப்பர் மார்க்கெட் உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் சிக்குவது இது முதன் முறையல்ல.
ஏற்கனவே 2022-ஆம் ஆண்டில், சுவிஸ் ரோல் ரொட்டிக்குள் இருந்த 3 செயற்கைப் பற்களைத் தெரியாமல் கடித்து முதியவரின் பல் உடைந்தது குறிப்பிடத்தக்கது.