Latestமலேசியா

மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை அரசியலாக்காதீர்; இஸ்தானா நெகாரா நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை-10 – மேல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என, அனைத்து தரப்பினரையும் இஸ்தானா நெகாரா நினைவுறுத்தியுள்ளது.

அந்நீதிபதிகள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் அரசியலமைப்பு நெருக்கடியை உண்டாக்கியிருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம் என்பது முக்கியமான தேசிய விவகாரமாகும்; எனவே அதனை விவேகமாகவும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப நெறிமுறையோடும் மேற்கொள்ள வேண்டும்.

பிரதமரின் ஆலோசனையைப் பெற்று, மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்துடன் கலந்துபேசி மாமன்னரே நீதிபதிகளை நியமிப்பார் என, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நீதி பரிபாலனத் துறையில் check and balance எனப்படும் சரிபார்ப்பு மற்றும் சமநிலை இருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கமாகும்.

ஆகவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மாமன்னர் எடுக்கும் முடிவுகள் எந்தவொரு தரப்பாலும் அரசியலாக்கப்படக் கூடாது என இஸ்தானா நெகாரா கூறியது.

நீதிபதிகள் நியமனம் சரியான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனவும், அது குறித்து விசாரிக்க அரச விசாரணை ஆணையம் மற்றும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டுமென்றும், முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உள்ளிட்ட 9 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கோரிக்கையை வலியுறுத்தினர்.

எனினும், நீதிபதிகள் நியமனம் அனைத்தும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், நெருக்கடி எதுவும் எழவில்லை எனவும் தேசிய சட்டத்துறை அலுவலகம் முன்னதாக தெளிவுப்படுத்தியிருந்தது.

நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து துன் தெங்கு மைமுன் துவான் மாட்டும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிமும் கடந்த வாரம் கட்டாயப் பணி ஓய்வுப் பெற்றதிலிருந்து இந்த ‘நெருக்கடி’ குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போதைக்கு மலாயா தலைமை நீதிபதி தான் ஸ்ரீ ஹஸ்னா ஹஷிம் அவ்விரு பொறுப்புகளையும் தற்காலிகமாக கவனித்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!