
ஷா ஆலாம், ஜனவரி-11 – சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, மாநில அரசின் மையப்படுத்தப்பட்ட பன்றி பண்ணைத் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
பன்றி வளர்ப்பை ஒழுங்குப் படுத்தவும், நவீனப்படுத்தவும் மாநில அரசு அத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மக்களின் நலன் குறித்து சுல்தான் ஷாராஃபுடின் கவலைத் தெரிவித்தார்.
“சிலாங்கூரில் சீனர்கள் மற்றும் இதர முஸ்லீம் அல்லாத மக்களின் உணவுத் தேவைக்காக சிறிய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பன்றி வளர்ப்புத் திட்டம் தேவை என்பதை புரிந்துகொள்கிறேன்”
“ஆனால், பெரிய அளவில் அதனை மேற்கொள்வது சரியல்ல; சிலாங்கூரில் பெரும்பான்மையாக உள்ள மலாய் முஸ்லீம்களின் உணர்ச்சிகளுக்கு அது மதிப்பளிக்காத செயல்” என அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக குவாலா லங்காட் பகுதி வாழ் மலாய்க்காரர்கள், நீண்ட காலமாகவே துர்நாற்றம், ஆற்றுத் தூய்மைக்கேடு, ஈக்களின் தொல்லை போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
வேண்டுமானால் சிலாங்கூர் மக்கள் பிரதிநிதிகள், பன்றிப் பண்ணைகள் உள்ள குவாலா லங்காட் போன்ற இடங்களுக்கு அருகில் தங்கி வாழ்ந்து பார்க்கட்டும்…அப்போது அவர்களுக்கு மக்கள் படும் இன்னல்கள் தெரியும் என சுல்தான் ஷாராஃபுடின் கடிந்துகொண்டார்.
அரண்மனையின் கடும் ஆட்சேபத்தைத் தொடர்ந்து, வசதிக் கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ Izham Hashim நாளை திங்கட் கிழமை சுல்தானை சந்தித்து விளக்கமளிக்கிறார்.
அச்சந்திப்பு, அரசின் நோக்கங்களை விளக்கவும், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவாதங்களை தெளிவுப்படுத்தவும் சுல்தானின் கவலைகளைத் தீர்க்கவும் முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030-ல் புக்கிட் தாகாரில் மையப்படுத்தப்பட்ட பன்றிப் பண்ணைக்கு இடம் மாறிச் செல்லும் முன், இவ்வாண்டு முதல் குவாலா லங்காட், தஞ்சோங் செப்பாட்டில் பன்றி வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு அனுமதியளித்துள்ளதே தற்போது சர்சையாகியுள்ளது.



