மாப்புத்தோ, டிசம்பர்-26 – கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மூண்ட வன்முறைகளைப் பயன்படுத்தி, 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளனர்.
தப்பும் போது சிறைப் பாதுகாவலர்களுடன் மோதியதில் 33 பேர் கொல்லப்பட்டு, 15 பேர் காயமடைந்தனர்.
இராணுவ உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் இதுவரை 150 கைதிகள் பிடிபட்டுள்ளனர்.
போர்ச்சுகீசிய மொழியைப் பேசும் அந்த ஆப்ரிக்க நாட்டில், அக்டோபர் 9-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 1975-ஆம் ஆண்டிலிருந்து பதவியிலிருக்கும் Frelimo கட்சியே வெற்றிப் பெற்றதை திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் உறுதிச் செய்தது.
அக்கட்சியின் தலைவர் Daniel Chapo 65.17 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது;
ஆனால் தோல்வி கண்ட எதிர்கட்சி வேட்பாளர் தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியதால், கலவரம் மூண்டு வன்முறையாக மாறியது.
இந்நிலையில், அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார கும்பலொன்று சிறைச்சாலையை நெருங்கி அங்கு குழப்பத்தை உண்டு பண்ணியது;
இதையடுத்து கைதிகள் சுவரை இடித்துத் தள்ளி விட்டு தப்பியோடினர்.
தப்பியோடிய கைதிகளில் சுமார் 30 பேர், கடந்த ஏழாண்டுகளாக அந்நாட்டின் வடபகுதியில் நிலவும் வன்முறைத் தாக்குதலுக்குக் காரணமான ஆயுதமேந்திய கும்பலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
இது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மொசாம்பிக் தேசியப் போலீஸ் படைத் தலைவர் சொன்னார்.
நீதிமன்ற முடிவுகள் வந்த அடுத்த 24 மணி நேரங்களில் மட்டும் வீதி ஆர்ப்பட்டங்களில் 2 போலீஸ்காரர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.