
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-10 – நாட்டில் அக்டோபர் தொடங்கி மோட்டார் சைக்கிளோட்டிகளும் டோல் கட்டணம் செலுத்த வேண்டுமென வைரலாகியுள்ள தகவலை, LLM எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
டோல் கட்டண வசூலிப்புக்கு உட்படுத்தப்படும் வாகனங்களின் பட்டியலில் தற்போதைக்கு எந்த மாற்றமுமில்லை என அது தெளிவுப்படுத்தியது.
ebidmotor.com என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள அத்தகவலில் உண்மையில்லை; இது போன்ற அடிப்படையற்ற தகவல்களால் பொது மக்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிளோட்டிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு, வீண் கவலையும் ஏற்படக் கூடும்.
அதோடு, அரசாங்கம் பொதுப் பணித் துறை, LLM, மற்றும்நெடுஞ்சாலைப் பராமாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் இது அவப்பெயரை ஏற்படுத்தி விடுமென, இன்று வெளியிட்ட அறிக்கையில் LLM கூறியது.
எனவே, இதுபோன்ற பொய்த் தகவல்களை பொது மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அது கேட்டுக் கொண்டது.
முன்னதாக ebidmotor.com ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான அச்செய்திக்கு 2,000-க்கும் மேற்பட்ட கருத்துகளும் சுமார் 600 பகிர்வுகளும் கிடைத்தன.