
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- ம.இ.கா மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையே சாத்தியமான கூட்டணி குறித்த எந்தவொரு யூகத்தையும் MIPP எனும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சித் தலைவர் P. புனிதன் நிராகரித்துள்ளார்.
ம.இ.காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை; எனவே அதைப் பற்றி இப்போது பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பான் அல்லது பெரிக்காத்தான் நேஷனலுடன் பேச வேண்டுமா அல்லது மூன்றாவது கூட்டணியை உருவாக்க வேண்டுமா என்பதை ம.இ.கா தான் முடிவுச் செய்ய வேண்டும்.
பெரிக்காத்தானைப் பொறுத்தவரை, எந்தவொரு ஒத்துழைப்பும் அதன் உச்சமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமென்பதை புனிதன் சுட்டிக் காட்டினார்.
அதோடு, பெரிக்காத்தான் கூட்டணியில் அதிகாரப்பூர்வ உறுப்பியம் பெற்ற இந்தியர் கட்சி என்பதால், இந்திய அடிப்படையிலான கட்சிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவும் முதலில் MIPP-யுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், பெரிக்காத்தானுக்கு இந்தியர்கள் மத்தியில் தொடக்கத்தில் 5% க்கும் குறைவாக இருந்த ஆதரவு பின்னர் 20% ஆகவும், அண்மைய இடைத்தேர்தல்களில் 35% ஆகவும் அதிகரித்திருப்பதாகக் கூறிக் கொண்ட புனிதன், MIPP-யின் பலத்தை நிரூபித்துள்ளதாகச் சொன்னார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் ‘வேண்டாத விருந்தாளியாக’ ம.இ.கா விளங்குவதால், எதிர்காலம் கருதி யாருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அதன் தலைமைத்துவம் அண்மையில் கூறியிருந்தது.
ஒருவேளை, தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி பெரிக்காத்தானில் இணைய ம.இ.கா முடிவெடுத்தால், அதனை வரவேற்போம் என்றும், எனினும், அது தலைமைத்துவத்தின் முடிவை பொருத்தது என்றும் பெரிக்காத்தான் தலைவர்கள் சிலர் முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.