
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-4- எதிர்காலம் கருதி, எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த ம.இ.கா தயார் என, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சனிக்கிழமை செய்த அறிவிப்புக்கு, எதிர்கட்சி கூட்டணியிலிருந்து ஆதரவு குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.
அவ்வகையில், ம.இ.கா, பெரிக்காத்தான் கூட்டணியுடன் உறவைப் புதுப்பிப்பதை, தனிப்பட்ட முறையில் தாம் வரவேற்பதாக, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
நாட்டின் மிக மூத்த அரசியல் கட்சிகளில் ஒன்றான ம.இ.காவின் வருகை, பெரிக்காத்தான் கூட்டணியை வலுப்படுத்துமென்றால், தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார் அவர்.
என்றாலும், இது கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவு; குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டிய முடிவு என, சஞ்சீவன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
ம.இ.கா-வை ம் வலுவான கட்சியாக முன்னிலைப்படுத்த ‘நியாயமான’ முடிவுகளை தைரியமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் முன்னதாகக் கூறியிருந்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா வேண்டாத விருந்தாளியாக நடத்தப்படுவதுடன், அமைச்சரவைப் பதவிகளும் மறுக்கப்பட்டது குறித்து , தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அண்மையில் ஏமாற்றம் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.