கோலாலம்பூர், செப்டம்பர் 9 – ம.இ.காவை குறை கூறி, குறிப்பாக இந்தியச் சமூகத்தின் பிரச்சினையில் கட்சியை நோக்கி விரல் நீட்டினால், இனி கட்சி பொருத்தக்கொள்ள விரும்பவில்லை என அதன் தேசிய இளைஞர் அணித் தலைவர் அர்வின் கிருஷ்ணன் கூறினார்.
இந்தியச் சமூகத்திற்கு எக்காலத்திலும் ம.இ.கா பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதில்லை.
தேர்தல்களின் போது வெற்றி பெறுவதற்காக சில கட்சிகளை போல, ம.இ.கா அவதூறுகளையும் பரப்பியதும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அவதூறுகளை எதிர்த்துப் போராடுவதில் இளைஞர்கள் இன்னும் தீவிரமாக இருக்கக் வேண்டும். இனியும் அமைதியாக இருக்க கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
பல தலைவர்களால் செதுக்கப்பட்ட கட்சிதான் ம.இ.கா. சுதந்திரம் பெற்றது முதல் பிரஜை உரிமை, தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் உள்ளிட்ட எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட கட்சியாக ம.இ.கா இன்றும் வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் நினைவுபடுத்தினார்.
இதனை வலுப்படுத்த, நமது வியூகத்தை மாற்ற வேண்டும். எதிர்வரும் தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது, அரசியலில் எவ்வாறு செயல்படுவது, போன்றவற்றை அறிந்து கொள்ள ‘Akademi Chief Vicky Politik’ உருவாக்கம் கண்டதாக அவர் விளக்கமளித்தார்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற மாநாட்டில் தேசிய ம.இ.கா மகளிர் பிரிவின் ‘one stop center’ முகப்பிடம் சேவையை டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடக்கி வைத்தார்.
இந்த முகப்பிடம் சேவை மாதத்திற்கு இரு நாட்கள் ம.இ.கா தலைமையகத்தில் செயல்படவுள்ளதாகத் தேசிய மகளிர் அணித் தலைவி சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.
இளைஞர் அணியின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், மகளிர் அணித் தலைவி சரஸ்வதி, புத்ரா அணித் தலைவர் டாக்டர் சத்திஷ் குமார், புத்ரி அணித் தலைவி தீபா சோலைமலை ஆகியோர் நேற்று நடைபெற்ற 37ஆம் ஆண்டு ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்திரிகளுக்கான மாநாட்டில் பல தீர்மானங்களையும் அவரவர் அணி சார்ந்த கொள்கை உரையையும் முன்வைத்தனர்.