
கோலாலாம்பூர், செப்டம்பர்-2 – தேசிய முன்னணியின் நீண்ட கால உறுப்புக் கட்சிகளான ம.சீ.ச, ம.இ.கா இரண்டும் அக்கூட்டணியிலிருந்து விலகக் போவது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை.
தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) அவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவ்விரு கட்சிகளும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வரலாமென, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ Tuan Ibrahim Tuan Man முன்னதாகக் கூறியிருந்தது குறுத்து சாஹிட் கருத்துரைத்தார்.
அது Tuan Ibrahimமின் தனிப்பட்ட விருப்பமாகவே இருக்கக்கூடும்; மாறாக பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அழைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
ஆசை வார்த்தைகளைக் காட்டி தேசிய முன்னணி பங்காளிகளை கவர்ந்திழுக்க எதிர்கட்சியினர் நடத்தும் ‘நாடகங்களை’ நாங்கள் அறிவோம் எனக் கூறிய சாஹிட், ஒருவேளை அப்படியே பெரிக்காத்தான் பக்கம் போனாலும் கூட ம.சீ.சவுக்கும் ம.இ.காவுக்கும் நன்மைக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையென நினைவுறுத்தினார்.
ம.சீ.சவின் எதிர்காலம் குறித்து அக்டோபரில் நடைபெறவிருக்கும் தேசியப் பேராளர் மாநாட்டில் முடிவுச் செய்யப்படுமென அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ வீ கா சியோங் (Wee Ka Siong ) முன்னதாகக் கூறியிருந்தார்.
அதே சமயம், ம.இ.காவோ, தனது எதிர்காலம் குறித்து எந்த கட்சியுடன் பேசத் தயார் என கூறியிருந்தது.
கெடா, பினாங்கு மாநில ம.இ.கா தொடர்புக் குழுக்கள் ஒரு படி மேலே சென்று, தேசிய முன்னணியிலிருந்து வெளியேற தீர்மானமே நிறைவேற்றின.
எனினும், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ம.சீ.ச, ம.இ.கா தலைமையை அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.