
வாஷிங்டன், ஆகஸ்ட்-7 – 24 மணி நேரங்களில் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டியிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், சொல்லியபடியே அதிரடியாக 25% வரி விதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே 25% வரி அறிவிக்கப்பட்ட நிலையில், இதையும் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி விகிதம் 50%-தாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக இந்தக் கூடுதல் 25% வரி விதிப்பதாக ட்ரம்ப் சொன்னார்.
இன்னும் 3 வாரங்களில் அதாவது ஆகஸ்ட் 27-ஆம் தேதி இந்த 50% வரி அமுலுக்கு வருகிறது.
இதையடுத்து, தற்போதைக்கு பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு மட்டுமே அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது.
வேறு எந்த நாட்டுக்கும் 50%-க்கும் மேல் வரி விதிக்கப்படவில்லை; சீனா மற்றும் மெக்சிகோ மீதான உயரிய வரிகள் பேச்சுவார்த்தைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள இந்த 50% வரி நியாயமற்றது, அடிப்படையற்றது என இந்தியா சாடியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவை அமெரிக்கா வேண்டுமென்றே குறி வைக்கிறது.
ஆனால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முடிவானது முழுக்க முழுக்க சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்; இது தேச நலனுக்காக எடுக்கும் முடிவாகும் என ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம்.
இருந்த போதிலும், அமெரிக்கா பிடிவாதமாகக் கூடுதல் வரி விதிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது என இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் காட்டத்துடன் கூறியது