
கோலாலம்பூர், ஜன 12 – இராணுவ முகாம்களில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, விதிமுறைகள் மற்றும் கட்டொழுங்கை கடுமையாக அமல்படுத்துவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின்
( Khalid Nordin ) இன்று உறுதியளித்தார்.
தற்காப்பு அமைச்சும் மலேசிய ஆயுதப்படைகளும் நீண்ட காலமாக நாடு முழுவதும் கொள்கையற்ற செயல்பாடுகளை இராணுவ முகாம்களில் தடை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இராணுவ முகாம்களில் அனுமதிக்கப்பட்ட சமூக நடவடிக்கைகள் குறித்து தெளிவான மற்றும் கடுமையான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுதப் படைகளின் புனிதமான பிம்பத்திற்கு களங்கம் விளைவிக்கும் இந்த தார்மீக மீறல்களில் ஈடுபடும் எவரும் தண்டிக்கப்படுவதையும், பணியிலிருந்து அவமரியாதையாக வெளியேற்றப்படுவதையும் நாங்கள் உறுதி செய்வோம் என்று விஸ்மா பெர்விராவில் (Wisma Perwira ) வில் புத்தாண்டு உரையின்போது காலிட் நோர்டின் தெரிவித்தார்.
பணியாளர்களிடையே ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்களைத் தடுக்கும் நோக்கில் இராணுவ மத அடிப்படையிலான அமைப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் எந்த முகாம்களிலும் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம், இராணுவ முகாம்களில் ஒழுக்கக்கேடான செயல்கள், பொழுதுபோக்குக்காக வெளியாட்கள் அங்கீகரிக்கப்படாத நுழைவு மற்றும் சிறு மதுபான விடுதிகள் இருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து உள்கட்ட விசாரணையைத் தொடங்க ஆயுதப் படைக்கு அறிவுறுத்தியதாக தற்காப்பு அமைச்சு தெரிவ்த்தது.



