செப்டம்பர் -2, கடந்த வியாழனன்று ரினி தமிழ்ப்பள்ளியின் சுதந்திர தின அணிவகுப்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி அளவிலான இந்நிகழ்வில் ஜொகூர் பாரு மாவட்ட கல்விப்பிரிவு மாணவர் நலன் துணை அதிகாரி திரு. சுஹைடி பின் சாலே அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மேலும், முன்னாள் இந்திய இராணுவ வீரர்கள் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொண்டு தங்களின் நாட்டுப்பற்றினை வெளிபடுத்தினர். ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சுற்றுப்பகுதில் அமைந்துள்ள வசிப்பிடத்தை மாணவர்கள் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மிதிவண்டிகளில் வலம் வந்தனர். சிலர் தேசிய தினக் கொண்டாட்டத்தை வெளிக்கொணரும் குடைகளை ஏந்தியும் தேசியக் கொடிகளை அசைத்தவாறும் ‘மெர்டெக்கா! மெர்டெக்கா! என முழக்கமிட்டு மிகுந்த ஆர்வத்துடன் வலம் வந்தனர். இந்த அணிவகுப்பில் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்கள், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என அனைவரும் மாணவர்களுடன் இணைந்து வசிப்பிடத்தைச் சுற்றி வலம் வந்தது இன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது.
பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி அவர்கள் வரவேற்புரை வழங்கி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இன்றைய சிறப்பு விருந்தினர் திரு. சுஹைடி பின் சாலே அவர்கள் பள்ளியில் மாணவர்களிடையே நாட்டுப் பற்றினை வித்திடுவது மிக அவசியமானது என வலியுறுத்தியதோடு மாணவர்கள் ஒற்றுமையோடு இருக்க பல்வேறு யுத்திகளைக் கையாள வேண்டுமென கூறினார். தொடர்ந்து, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகளின் சங்கத் தலைவர் திருவாளர் கண்ணையா அப்புடு அவர்கள் விடுதலைக்கு முன்னிருந்த ஆட்சி முறையை நினைவுகூர்ந்ததோடு சுதந்திரம் பெறப்பட்ட முறையினையும் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
மேலும், இந்நிகழ்வில் மாணவர்களின் கண்கவர் படைப்புகளும் இடம்பெற்றன. மாணவர்கள் தங்களின் தேசிய உணர்வினை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு படைப்புகளை இன்றைய நிகழ்வில் படைத்தனர். இன்றைய படைப்பினில் தலைமையாசிரியை திருமதி.சு. தமிழ்ச்செல்வி அவர்களால் இயற்றப்பட்ட கவிதையும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும். நாட்டுப் பற்றை விளக்கும் வகையில் தேசிய மொழியில் இயற்றப்பட்ட அக்கவிதையினை மாணவர்கள் சிறப்பாக ஒப்புவித்தனர். இறுதியாக, தலைமையாசிரியை அவர்கள் இன்றைய தேசிய தின அணிவகுப்பினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள், இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்கச் செயலவை உறுப்பினர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.