
கோலாலம்பூர், ஜன 19 – கடந்த ஆண்டு நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரிடமிருந்து 140,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக கொண்டுவரப்பட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை குடிநுழைவு பெண் அதிகாரி ஒருவர் இன்று ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
முறையான ஆவணங்கள் இன்றி 56 வங்காளதேச பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்க வெளிநாட்டு ஆடவரிடம் 12,500 ரிங்கிட், 47,500 ரிங்கிட், 52,500 ரிங்கிட் மற்றும் 47,500 ரிங்கிட்டை பெற்றதாக 49 வயதுடைய மஸ்துரா அஸிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் குடிநுழைவுத்துறை துணை இயக்குநர் என்ற முறையில் கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம்தேதி மற்றும் மே 15 தேதிக்குமிடையே செப்பாங்கிலுள்ள ஒரு வர்த்தக மையம், பெட்ரோல் நிலையம் , கோத்தா வாரிசான் அங்காடி மையம் ஆகிய இடங்களில் இக்குற்றத்தை புரிந்ததாக மஸ்துரா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் 20 ,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. மேலும் மாதந்தோறும் ஒரு முறை எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த குற்றசாட்டு மீண்டும் பிப்ரவரி 25 ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



