
போர்ட் கிள்ளான், அக் 28 –
சிலாங்கூர் சுங்கத்துறை அதிகாரிகள்
வரி செலுத்தப்படாத சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14 இறக்குமதி கார்களை ஷா அலாமிலுள்ள கிடங்கு ஒன்றில் செப்டம்பர் 9 ஆம்தேதி பறிமுதல் செய்தனர்.
பல லட்சம் ரிங்கிட் மதிப்புடைய Porsche மற்றும் Mercedes May back வகை கார்களும் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அடங்கும் என சிலாங்கூர் சுங்கத்துறையின் தலைமை இயக்குனர் முகமட் அஷார் அகமட் பஹரசி ( Mohamad Azhar Ahmad Paharazi ) தெரிவித்தார்.
மேலும் அந்த கார்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கின் அனுமதி ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே காலவதியாகிவிட்டது.
3.34 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அனைத்து வாகனங்களும் மேல் நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வட துறைமுகத்திலுள்ள சுங்கத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது Mohamad Azhar தெரிவித்தார்.
Recond வசதியைக் கொண்ட இந்த கார்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் அவற்றை எவரும் கொள்முதல் செய்யவில்லை.
இதனிடையே மேற்கு துறைமுக தீர்வையற்ற மண்டலப் பகுதிகளில் சிலாங்கூர் சுங்கத்துறை மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையில் இறக்குமதி அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 1,310 லிட்டர் மதுபானங்களையும் சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சுமார் 286,180 ரிங்கிட் வரி மதிப்பைக் கொண்ட இந்த மதுபானங்கள் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டதாக Mohamad Azhar கூறினார்.



