கோலாலம்பூர், டிசம்பர்-20, மக்கள் மத்தியில் e-Wallet போன்ற ரொக்கமில்லா மின் கட்டண முறை பிரபலமாகியிருந்தாலும், புழக்கத்தில் விடுவதற்காக புதியப் பண நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்படுமென, மத்திய வங்கியான பேங் நெகாரா தெரிவித்துள்ளது.
மலேசியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை ரொக்கம் என்பது தொடர்ந்து முக்கியக் கட்டண முறையாக இருந்து வருமென, பேங் நெகாரா அறிக்கையொன்றில் கூறியது.
எனவே, மக்கள் கைகளில் எப்போதும் ரொக்கம் புழங்குவது உறுதிச் செய்யப்படும் என அது உத்தரவாதமளித்தது.
நாட்டில் ஆகக் கடைசியாக 2012-ஆம் ஆண்டு, புதிய வடிவமைப்போடு 1 ரிங்கிட், 5 ரிங்கிட், 10 ரிங்கிட், 20 ரிங்கிட் மற்றும் 100 ரிங்கிட் மதிப்புகளில் பண நோட்டுகள் வெளியிடப்பட்டன.
அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பாக, நாட்டின் சுதந்திர பொன்விழாவை ஒட்டி 50 ரிங்கிட் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.
மலேசியர்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் e-Wallet முறையாக Touch ‘n Go விளங்குவதாகக் கூறப்படுகிறது.
டோல் கட்டணம், கார் நிறுத்துமிடக் கட்டணம், உணவு மற்றும் பானங்களுக்கான கட்டணம், பொருட்களை அனுப்பும் சேவை போன்றவற்றுக்கு Touch ‘n Go அதிகம் பயன்படுத்தப்படுகிறது.