
போர்த்துக்கல், ஜனவரி 21 – உலகின் பிரபல காற்பந்து நட்சத்திரமான Cristiano Ronaldo-வின் வெண்கலச் சிலையை தீவைத்து எரித்த சந்தேக நபரை போர்த்துக்கல் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அந்த ஆடவன் சிலையின் மீது எரிபொருள் ஊற்றி தீ வைத்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளான். மேலும் சிலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்த இளைஞன் ராப் இசை ஒலிக்க நடனமாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் போர்த்துக்கல் Madeira தலைநகரின் அருங்காட்சியகத்தின் முன்பாக நடந்தது என்றும் வீடியோவை வெளியிட்ட ஆடவன், “இது கடவுளின் கடைசி எச்சரிக்கை” என குறிப்பிட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது.
போலீஸ் தகவலின்படி, தீ விரைவில் அணைந்ததால் சிலைக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



