
கோலாலம்பூர், நவம்பர்-6 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதர கல்வியாளர்களும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும்; தேவையற்றதை பேச வேண்டாம் என, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் அறிவுறுத்தியுள்ளார்.
கல்விச் சுதந்திரம் முக்கியமானது தான், ஆனால் துறைக்கு அப்பாற்பட்ட வெளி விஷயங்களில் கருத்து தெரிவிப்பது உயர் கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
UIA எனப்படும் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் Dr Soleha Yaacob “பண்டைய ரோம நாகரீகத்தின் கப்பல் கட்டுமான யுக்திகள் மலாய் கடலோடியர்களிடமிருந்து கற்றுக்கொண்டது” என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
ஆராய்ச்சி மற்றும் கல்வி உலகில் ஒழுங்கு, வழிகாட்டுதல்கள், மற்றும் நம்பகத்தன்மை கடைபிடிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
எனவே, போகிறப் போக்கில் எதையாவது பேசி விடாமல், தத்தம் துறைகளின் எல்லைக்குட்பட்டு மட்டுமே கருத்து தெரிவிப்பது நலம் என, சாம்ரி கூறினார்.
பல்கலைக்கழ பாட நேரத்தின் போது Dr Soleha பேசிய பேச்சுகளின் வீடியோ முன்னதாக வைரலானது.
UIA கல்விப் பணியாளர்கள் சங்கமான ASA-வும் அதிருப்தி அடைந்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
Soleha-வின் பெயரைக் குறிப்பிடாமல், நெறிமுறை, தொழில்முறை அல்லது கல்வித் தரத்தை மீறும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் அல்லது நடந்துகொள்ளும் கல்வியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அது வலியுறுத்தியது.



