
லங்காவி செல்லும் பயணிகள் அதிகரிப்பு: 56,000க்கும் மேற்பட்ட Ferry டிக்கெட்டுகள் விற்பனை
அலோர் ஸ்டார், பிப்ரவரி 16 –
பள்ளி விடுமுறை மற்றும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் லங்காவி தீவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Ferry Line Ventures Sdn Bhd நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் தெரிவித்ததாவது, பிப்ரவரி 13 முதல் 21 வரை குவாலா கெடா, குவாலா பெர்லிஸ் மற்றும் லங்காவி இடையிலான பயணங்களுக்கு இதுவரை 56,267 பெர்ரி (Ferry) டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
மேலும் 36,733 டிக்கெட்டுகள் கவுண்டர்களிலும் ஆன்லைனிலும் இன்னும் கிடைக்கின்றன. இந்த 10 நாட்களுக்காக மொத்தம் 93,000 டிக்கெட்டுகள் தயாராக வைத்துள்ளதாகவும், தேவைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மொத்தம் 188 வழக்கமான பெர்ரி (Ferry) சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் குவாலா கெடாவிலிருந்து லங்காவி நோக்கி 44 சேவைகளும், லங்காவியிலிருந்து குவாலா கெடா நோக்கி 44 சேவைகளும் உள்ளன. குவாலா பெர்லிஸ் வழித்தடத்தில் லங்காவி நோக்கி 50 சேவைகளும், திரும்ப 50 சேவைகளும் இயக்கப்படுகின்றன.
கடைசி நேரத்தில் டிக்கெட் தேவை அதிகரித்ததால் 25 கூடுதல் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையிருந்தால் மேலும் சேவைகள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி, பயண நேரத்துக்கு முன்பாகவே துறைமுகங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



