
கோலாலம்பூர், மார்ச்-7 – வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பு முகவரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுவதை மலேசியா கினி செய்தியாளர் பி.நந்தகுமார் மறுத்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் கடத்தல் கும்பல்களை கட்டுரைகள் வாயிலாக அம்பலப்படுத்தியதால் இலாபமடைந்ததாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
அவ்விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதாகி 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட நந்தகுமார், செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுதலையானார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் கடத்தல் கும்பல் குறித்து 2 கட்டுரைகளை வெளியிடாமல் இருப்பதற்காக, 100,000 ரிங்கிட்டில் லஞ்ச பேரத்தை ஆரம்பித்து 20,000 ரிங்கிட்டில் முடித்து, பணத்தை கையில் வாங்கியதாக அவர் விசாரிக்கப்பட்டார்.
இந்நிலையில் மலேசியா கினி ஊடகத்துக்கு வழங்கியப் பேட்டியில் அவர் அக்குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்தார்.
உண்மையில் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பாகிஸ்தானியரிடமிருந்து மேற்கொண்டு விவரங்களைத் தந்திரமாகக் கவருவதற்கே அவருடன் ஒத்துழைப்பது போல் நடித்தேன்.
அவரோ திடீரென ஒரு கடித உறையை என்னிடம் நீட்டினார்; அதனுள் கண்டிப்பாக பணம் தான் இருக்கும் என்ற யூகத்தில், ஓர் ஆதாரமாக இருக்கட்டுமே என அதை நான் பெற்றுக் கொண்டேன்.
அடுத்த நொடியில், பத்துக்கும் மேற்பட்ட MACC அதிகாரிகள் திடுதிடுப்பென சுற்றி வளைத்து என்னைக் கைதுச் செய்தனர் என நந்தகுமார் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள ஹோட்டலில் தான் பிரதமர் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க நான் சென்றிருந்தேன்; அதனால் தான் அங்கேயே அந்த முகவரை சந்திக்க ஒப்புக் கொண்டேன்…காரணம் பிரதமர் வருவதால் ஏராளமான CCTV கேமராக்கள் இருக்கும், எந்த ஆதாரமும் தப்பிக்க முடியாதென்ற எண்ணத்தில்.
உண்மையிலேயே லஞ்சம் வாங்குவது என் நோக்கமாக இருந்திருந்தால், நான் ஏன் பிரதமர் வரும் ஹோட்டலை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என நந்தகுமார் கேள்வியெழுப்பினார்.
அந்த பாகிஸ்தானிய முகவரை சிக்க வைக்கும் தனது திட்டம் குறித்து மலேசியா கினி நிர்வாகத்திடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஆபத்தான வேலை என்பதால் நிர்வாகம் ஒப்புக் கொள்ளாதோ என்ற தயக்கமே அதற்கு காரணம் என்றார் அவர்.
நந்தகுமார் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசியா கினி தனியாக சுயேட்டை விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
விசாரணை முடியும் வரை அவர் வழக்கமான நடைமுறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.