
லண்டன் , செப் -30,
லண்டனில் டேவிஸ்டாக் ( Tavistock ) சதுக்கத்தில் உள்ள இந்தியாவின் சுதந்திர தந்தை அன்னல் மகாத்மா காந்தியின் சிலை திங்கட்கிழமை சேதப்படுத்தப்பட்டது. அக்டோபர் 2 ஆம் தேதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அந்த சிலை சேதப்படுத்தப்பட்டது வெட்கப்படக்கூடிய ஒரு செயல் என்பதோடு அகிம்சையின் மரபின் மீதான இந்த தாக்குதலை இந்திய தூதரகம் கடுமையாக சாடியது.
நினைவுச்சின்னத்தை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதை ஒருங்கிணைக்க அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்ததோடு , இந்த அவமதிப்பு குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் X தளத்தில் தெரிவித்துள்ளது. இது வெறும் காழ்ப்புணர்ச்சி மட்டுமல்ல, அனைத்துலக அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை என்ற கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும்.
உடனடி நடவடிக்கைக்காக உள்ளூர் அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். லண்டன் மாநகர் போலீஸ் மற்றும் உள்ளூர் கேம்டன் ஊராட்சி மன்ற அதிகாரிகள், நாசவேலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.நா வினால் அனைத்துலக அகிம்சை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் அன்னல காந்தியடிகளின் விருப்பமான பஜனைகளுடன் நினைவுகூறப்படுகிறது.
சிற்பக் கலைஞர் ப்ரெடா பிரில்லியண்டால் ( Fredda Brillant ) செதுக்கப்பட்டு, இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு Tavistock சதுக்கத்தில் திறக்கப்பட்டது. பீடத்தில் உள்ள கல்வெட்டில் “மகாத்மா காந்தி, 1869-1948 என்று பொறிக்கப்பட்டது.