
லண்டன், மார்ச் 21 – பிரிட்டனின் Heathrow விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான மலேசிய விமான நிறுவனத்தின் நான்கு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
நேற்றிரவு மணி 11.37 அளவில் KLIAயிலிருந்து லண்டன் புறப்பட்ட MH2 விமானம் நெதர்லாந்து Amsterdam Schiphol அனைத்துலக விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது என மலேசிய விமான குழுமம் தெரிவித்தது.
246 பயணிகள் மற்றும் 17 விமான ஊழியர்ளைக் கொண்ட அந்த விமானம் உள்நாட்டு நேரப்படி காலை மணி 6.19 அளவில் பாதுகாப்புடன் Amsterdam விமான நிலையத்தில் தரையிறங்கியது .
விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ள ஹோட்டலில் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் இதர விமானங்களின் மூலம் அனுப்பப்பட்டனர்.
இன்று காலை மணி 9.30க்கு லண்டன் புறப்பட்ட MH4 விமானம் திரும்பத் தொடங்கியதை தொடர்ந்து இன்று மாலை மணி 3.30 அளவில் KLIA வந்தடையும் என அறிவிக்கப்பட்டது. MH1 மற்றும் MH3 ஆகிய இரு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன.
அவ்விரண்டு விமானங்களும் இன்று ஹித்ரோ விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் புறப்படுவதாக இருந்தாக மலேசிய விமான நிறுவன குழுமமான MAG தெரிவித்தது.
லண்டனுக்கு மேற்கேயுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான பிரிட்டனின் Heathrow விமான நிலையம் இன்று அதிகாலை மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கான விமானங்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பாதிக்கப்படும் வகையில், வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, Heathrowவில் குறிப்பிடத்தக்க மின் தடை ஏற்பட்டுள்ளது.
எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, இன்றைய தினம் இரவு மணி 11.59 வரை Heathrow மூடப்படும் என விமான நிலைய அதிகாரி தனது சமுக வலைத்தளத்தில் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.