கோலாலம்பூர், அக்டோபர் 14 – லெபோ அம்பாங் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை ‘பிரதமருடன் தீபாவளி’ எனும் இன்னிசை கலை நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இலக்கவியல் துறை அமைச்சரும், ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினர்.
அதுமட்டுமல்லாமல், டத்தோ ஸ்ரீ சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, ஜாலான் பங்சார் தமிழ்ப்பள்ளி, கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி, அப்பர் தமிழ்ப்பள்ளி, சன் பெங் தமிழ்ப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளின் B40 பிரிவைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட்டை தீபாவளி அன்பளிப்பாக வழங்கினார்.
மேலும், 15 வருடமாக மிகச் சிறந்த முறையில் இந்நிகழ்ச்சியை நடத்தி வரும் லெபோ அம்பாங் வர்த்தகர்கள் சங்கத்திற்கும், அவர் 10,000 ரிங்கிட்டை வழங்கியிருக்கிறார்.
இச்சங்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், அதன் நற்செயல்களுக்கும் இத்தொகை உதவியாக அமையும் என்று லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் செயலாளர் இராஜன் தெரிவித்தார்.
கடுமையான மழைக்கு இடையே நடைபெற்ற இந்த விழாவில் ஏறக்குறைய 5,000 மக்கள் கலந்து கொண்டனர்.