
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வரும் மின்னணுக் கழிவுகளை எடுத்துச் செல்லும் அல்லது அகற்றும் இடமாக மலேசியா மாறாதிருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டில், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு உறுதியாக உள்ளது.
அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் அவ்வாறு கூறினார்.
இந்நடவடிக்கை, அபாயகரமான கழிவுகளின் எல்லை தாண்டிய நகர்வுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் வெளியேற்றம் மீதான பேசல் ஒப்பந்தத்திற்கு (Basel Convention ) ஏற்ப அமைந்துள்ளது.
இந்த பேசல் ஒப்பந்தத்தின் படி, மின்னணுக் கழிவுகள் போன்ற திட்டமிடப்பட்ட கழிவுகளின் எந்தவோர் எல்லைத் தாண்டிய நகர்வுக்கும் முன், போக்குவரத்து, பரிமாற்றம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளு அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.
என்றாலும், எல்லை தாண்டிய மின் கழிவுகள் மலேசியாவிற்குள் கொட்டப்படும் சவால்களை எதிர்கொள்வதில், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையின் ஒத்துழைப்பு அவசியமாகும் என அவர் சொன்னார்.
முன்னதாக, குவாலா லங்காட், தெலோக் பங்லீமா காராங்கில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மின்னணுக் கழிவுகள் ஆலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 50,000 கிலோ கிராம் உயிருள்ள தோட்டாக்கள், தோட்டா உறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
அவையனைத்தும் இந்நாட்டுக்குள் கடத்தி கொண்டு வரப்பட்டவையாகும்.
இதையடுத்து 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில், கடந்தாண்டு டிசம்பர் 31 வரை நாட்டில் 44 அத்தகைய சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவற்றில் 8 ஆலைகள் மூடப்பட்டு விட்டன.
எஞ்சிய 36 ஆலைகள் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் சொன்னார்.
மின்னணுக் கழிவுகள் என்பது, பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும்.