கோலாலம்பூர், டிசம்பர்-10 – முஹமட் யூனுஸ் தலைமையிலான வங்காளதேச இடைக்கால அரசாங்கம் இனப்படுகொலை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, மலேசியா உடனடியாக தலையிட வேண்டும்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜிட் முன்வைத்துள்ள அக்குற்றச்சாட்டு கடுமையானதென்பதால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்விஷயத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தலைமையில் இந்து மக்கள் பிரதிநிதிகள் இன்று நாடாளுமன்றத்தில் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அதனை வலியுறுத்தினர்.
ராயருடன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், செனட்டர் Dr ஆர்.லிங்கேஷ்வரன் ஆகியோரும் அதில் பங்கேற்று, பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் 2 முக்கியப் பரிந்துரைகளை முன் வைத்துள்ளனர்.
முதலாவது, மலேசியாவுக்கான வங்காளதேச தூதரை அழைத்து, அந்தத் தெற்காசிய நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்த வேண்டும்.
இரண்டாவது, தேவை ஏற்பட்டால் மீட்புக் குழுவினரை அனுப்பி, அங்கு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை மீட்டு மலேசியாவில் தற்காலிகமாக அடைக்கலம் தர வேண்டும் என்பதாகும்.
பாலஸ்தீன விவகாரத்தில் மனிதநேய அடிப்படையில் எப்படி ஒன்றிணைந்து குரல் கொடுத்தோமோ, அதே போல் எங்கு அநியாயம் நடந்தாலும் குரல் கொடுப்போம் என பிரதமர் பல முறை கூறியுள்ளார்.
எனவே, இந்த வங்காளதேச சிறுபான்மையினர் விஷயத்திலும் டத்தோ ஸ்ரீ அன்வார் குரலெழுப்பி, அங்குள்ள சிறுபான்மையினருக்கு விடிவுகாலம் பிறக்க வழி செய்ய வேண்டுமென ராயர் கேட்டுக் கொண்டார்.
பொறுப்புக்கு வந்த 3 மாதங்களில் முஹமட் யூனுஸ் இந்துக்கள், மற்றும் இதர சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தவறி விட்டார்.
மாறாக, அவரது அரசாங்கம் மிகவும் நுட்பமான முறையில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக ஹசீனா முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
வங்காளதேச மக்கள் தொகையில் சுமார் 8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 31 லட்சம் பேர் இந்துக்கள் ஆவர்.