
கோலாலம்பூர், ஜூலை-2 – SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விரிவாக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பினர், குறிப்பாக பயனீட்டாளர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
வணிகர்கள் நியாயமற்ற வகையில் இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கான வாய்ப்பைக் குறைக்க அது முக்கியமென, பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று தொடங்கிய இந்த SST விரிவாக்கம், பெரிய குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தாது என நிதி அமைச்சும் ஆய்வு நிறுவனங்களும் செய்த கணிப்புகளின் படி தெரியவந்துள்ளது.
குறிப்பாக பணவீக்கமும் 0.25% முதல் 1.6% வரையிலேயே இருக்குமென, பொருளாதாரப் பேராசிரியர் மெடலின் பெர்மா கூறினார்.
SST-யை அடிப்படைத் தேவைகளில் திணிக்காமல், ஆடம்பரப் பொருட்கள், பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறை சேவைகளுக்கு மட்டுமே விரிவுபடுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதனால் குடும்பங்களின் வாங்கும் சக்தியில் பெரியத் தாக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது; பணவீக்க அழுத்தங்களையும் கட்டுப்படுத்த முடிவதாக அவர் சொன்னார்.
என்றாலும், கொள்ளை இலாபம் அடிக்கும் சில வணிகர்கள், பொருட்களின் விலைகளை உயர்த்தி, அதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்வதைத் தடுக்க அரசாங்கம் கண்காணிப்புகளை அதிகரிக்க வேண்டும் என, மெடலின் கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், பொது மக்களும், முறையற்ற விலை உயர்வுகள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டுமென்றார் அவர்.
நேற்று முதல் அமுலுக்க வந்துள்ள SST விரிவாக்கத்தின் கீழ், அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கு 5% முதல் 10% வரை வரி விதிக்கப்படுகிறது;
அதே சமயம், பேரீச்சம்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் எலுமிச்சை போன்ற இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் உட்பட மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வரி விலக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.