கிள்ளான், ஜனவரி-25, நாட்டிலேயே முதன் முறையாக முழுக்க முழுக்க டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நிர்வாக முறையைக் கொண்ட ஆலயமாக, சிலாங்கூர், கிள்ளான் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் திகழ்கிறது.
அதிநவீன சுய கியோஸ்க் இயந்திரத்துடன் பக்தர்களின் வசதிக்காக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முழுமையான, விரிவான, ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பு முறையை, பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா தலைவருமான பி.பிரபாகரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.
இந்த இலக்கவியல் ஆலய நிர்வாக முறையில் 50-க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் உள்ளன.
ஆலய நிர்வாகத்தில் புதியப் புரட்சியாக, கைப்பேசி செயலி, சுய சேவை கியோஸ்க் இயந்திரங்கள், விளக்கு விற்பனை இயந்திரம் (vending machine) ஆகியவை அறிமுகம் காண்கின்றன.
ஆக மொத்தத்தில் ரொக்கமில்லா மற்றும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட இந்த நிர்வாக முறை, அர்ச்சனை, உபயம், பிரசாதம் உள்ளிட்ட வழிபாட்டு நடவடிக்கைகள், ஆலய மண்டப முன்பதிவு வசதி, மெய்நிகர் பூஜை பங்கேற்பு, பிரசாத விநியோகம் வரை உள்ளடக்கியுள்ளது.
இந்த டிஜிட்டல் நிர்வாக முறையானது, ஆள்பலத் தேவையைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, கணக்கியல் மற்றும் நிதி மேலாண்மையை சீர்படுத்துவதாக, புரட்சிகரமான இத்திட்டத்தை நனவாக்கியுள்ள Grasp Software Solutions Sdn Bhd கூறியது.