ஜோர்ஜ்டவுன், ஜனவரி-17,பினாங்கு மக்களுக்கான மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஜெர்மனியின் Elvation நிறுவனத்திலிருந்து மூன்று PiezoWave2 Touch Focus Shockwave இயந்திரங்களை வாங்குவதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அறிவித்தார்.
தலா 150,000 ரிங்கிட் மதிப்புள்ள இந்த அதிநவீன பிசியோதெரப்பி இயந்திரங்கள், பினாங்கு மருத்துவமனையிலும், ஆயர் ஈத்தாம் சுகாதார கிளினிக்கிலும் நிறுவப்பட உள்ளன.
வரும் மார்ச் தொடக்கத்தில் அவை செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
PiezoWave2 Touch, தசைக்கூட்டு நிலைமைகள், நாள்பட்ட வலி மற்றும் விளையாட்டு காயங்களுக்கு திறம்பட சிகிச்சையளிக்க வடிவமைக்கப்பட்ட ஊடுருவல் அல்லாத பிசியோதெரப்பி தொழில்நுட்பமாகும்.
வலி மேலாண்மை மற்றும் புத்துணர்வு சிகிச்சையில் துல்லிய செயல்திறனைக் கொண்ட அவ்வியந்திரங்கள், பினாங்கு சுகாதார அமைப்பில் ஒரு புரட்சிகரமான அங்கமாகும்.
மலேசியாவில் அதிக வயதான மக்கள்தொகையைக் கொண்ட பினாங்கில், மேம்பட்ட சுகாதார தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த முயற்சி பொருத்தமான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் வழி, மலேசியாவில் அரசாங்க சுகாதார மையங்களில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முதல் மாநிலமாக பினாங்கு திகழ்வதாக, முன்னாள் முதல் அமைச்சருமான குவான் எங் சொன்னார்.
PiezoWave2 Touch இயந்திரங்கள், வரும் ஆண்டுகளில் எண்ணற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் நிவாரணத்தையும் தருமென்றார் அவர்.