புது டெல்லி, அக்டோபர்-11 – அணுசக்தி தாக்குதலை மேற்கொள்ளும் இரு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை 23 பில்லியன் ரிங்கிட் செலவில் இந்தியா நிர்மாணிக்கவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக அந்நாட்டு தற்காப்பு அமைச்சின் முக்கிய அதிகாரி தெரிவித்தார்.
டீசல் எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை விட, அந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களால் விரைவாகவும் அதே சமயம் சத்தமில்லாமலும் செல்ல முடியும் என்பதோடு, நீருக்கடியில் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவும் முடியும்.
அது போன்ற உயர் சக்தி வாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளால் மட்டுமே நிர்மாணிக்க முடியும்.
இதற்கு முன் ரஷ்யாவிடம் அத்தகையை இரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலல்களை இந்தியா வாடகைக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவின் விசாகபட்டண துறைமுகத்தில் உள்ள இந்திய அரசின் கப்பல் நிர்மாணிப்பு மையத்தில் அப்புதியக் கப்பல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன இராணுவத்தின் நடமாட்டத்தை எதிர்கொள்ள ஏதுவாக, இந்தியாவும் தனது இராணுவத்தை நவீனமயமாக்க முயன்று வருகிறது.
கடற்படையின் ஆற்றலை அதிகரித்து, உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பை வலுப்படுத்துவதும் அவற்றில் அடங்கும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.