
நியூ யோர்க், மார்ச்-24 – அமெரிக்காவின் Disneyland-க்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு தனது 11 வயது மகனைக் கழுத்தறுத்துக் கொலைச் செய்துள்ளார், தனித்து வாழும் 48 வயது இந்திய வம்சாவளி தாய்.
மகனைக் கொன்று விட்டு சரிதா ராமராஜு தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2018-ஆம் ஆண்டு தனது கணவர் பிரகாஷ் ராஜை விவாகரத்து செய்து விட்டு ஒரே மகனுடன் கலிஃபோர்னியா மாநிலத்தில் சரிதா குடியேறினார்.
மகனை வளர்க்கும் உரிமை முன்னாள் கணவருக்குக் கிடைத்தது; சரிதாவுக்கு, மகனை அடிக்கடி சென்று பார்ப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், மகனின் மருத்துவ மற்றும் கல்வி விஷயங்களில் தன்னிடம் கலந்தாலோசிக்காமல் முன்னாள் கணவர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, மகனை வளர்க்கும் உரிமையை தனக்கே தரும்படி நீதிமன்றத்திடம் சரிதா முறையிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் , மகன் ஆசைப்பட்ட படியே 3 நாள் சுற்றுலாவாக Disneyland கேளிக்கைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்று ஹோட்டலில் அறை எடுத்து சரிதா தங்கியுள்ளார்.
எனினும் மகனென்றும் பாராமல் அவனைக் கத்தியால் கழுத்தறுத்து கொலைச் செய்த சரிதா, போதைப்பொருளை உட்கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கொலைக்கு முன்பு போலீஸுக்கு அழைத்து சரிதா தகவல் கூறியதால், எளிதில் சம்பவ இடம் விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெற்றத் தாயால் கொலையுண்ட சிறுவனது உடல் சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உடல் தேறிய சரிதாவை, கொலைக் குற்றத்திற்காக போலீஸார் கைதுச் செய்தனர்.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சரிதாவுக்கு 26 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்குமெனக் கூறப்படுகிறது.