
கோலாலாம்பூர், ஜனவரி-27 – வழிபாட்டுத் தலங்களை சட்டவிரோதக் கட்டுமானம் என மக்களவையில் பேசிய பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை, நாடாளுமன்ற உரிமைக் குழுவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
DAP-யைச் சேர்ந்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், அந்தத் தனித் தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளார்.
பாசீர் மாஸ் எம்.பி Ahmad Fadhli bin Shaari-யின் பேச்சு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதோடு மக்களவை உறுப்பினர்களைக் குழப்பும் வகையில் உள்ளது; எனவே அவரை உரிமைக் குழுவின் முன் நிறுத்தி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ராயர் வலியுறுத்தினார்.
மக்களவை விவாதங்களின் போது எல்லை மீறாமல், இனங்களுக்கு இடையில் பதற்றங்களை உருவாக்காமல், மோதல்களை உருவாக்காமல் பேச வேண்டும் என, அண்மையில் தான் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுரை கூறியிருந்தார்.
அதனை Fadhli பின்பற்றவில்லை.
பொத்தாம் பொதுவாக வழிபாட்டு தலங்கள் என்று குறிப்பிட்டவர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தை தான் சொல்ல வருகிறாரா என்ற தனது கேள்விக்கும் அவர் சொல்லவில்லை என ராயர் சொன்னார்.
அவரின் பேச்சு சமூக ஊடகங்களிலும் வைரலாகி, ஒருவரை ஒருவர் சாடுவதும், ஏளனமாக பேசுவதும் என நடந்து வருகிறது.
பல்லின – மத மக்கள் வாழும் நாட்டில் தேவையற்ற குழப்பங்களையும் பிரச்னைகளையும் இது உண்டாக்கலாம்.
எனவே, தனது இந்த தனித் தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்ப்பதாக, இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பில் ராயர் கூறினார்.



