
கோலாலம்பூர், பிப்ரவரி-10,
அனுமதியில்லாமல் கட்டப்பட்ட முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்திற்கு நாடளாவிய நிலையில் Town Hall சந்திப்புக் கூட்டங்களை நடத்தி உரியத் தீர்வு காணுமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கருத்து வலியுறுத்தப்பட்டது.
மாவட்டங்கள் வாரியாக சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களைச் சந்தித்து நில பிரச்னைக் குறித்து கலந்துரையாடி அன்றே ஒரு தீர்வு காண வேண்டும்.
அதை விடுத்து, சினமூட்டும் நடவடிக்கையில் இறங்குவது இன-மத நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்து விடுமென, Pertubuhan Jalinan Perpaduan Negara Malaysia அமைப்பின் தலைவர் Syed Muhammad Imran Syed Abdul Aziz நினைவுறுத்தினார்…
அந்த சந்திப்புக் கூட்டங்களில் இப்பிரச்னைக்கான blueprint திட்டங்களைப் போட வேண்டும் என்றார் அவர்.
சிலாங்கூர் சுல்தான் இன்று அறிக்கை வெளியிட்டிருப்பதே, இப்பிரச்னை எந்தளவுக்குக் கடுமையாக உள்ளது என்பதை உணர்த்துவதாக அவர் சொன்னார்.
அப்பரிந்துரையை ஆமோதித்த ம.இ.கா பத்து தொகுதி துணைத் தலைவர் பாலகுமரன், அச்சந்திப்பில் ஆவணப் பிரச்னை, நிர்வாகக் கெடுபிடிகள் உள்ளிட்டவற்றை நேரடியாக கலந்தாலோசித்து தீர்வு காணலாம் என்றார்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகங்கள் நிலப் பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
புதிய குடியிருப்புகளில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு நில மேம்பாட்டாளர்கள் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கருத்தை, ஓம் சக்தி ஆலய செயலாளர் சுரேஷ் ராவ் முன்வைத்தார்.
இது உணர்ச்சிப் பூர்வமான விஷயம் என்பதால், மக்கள் நிதானம் காக்கக் வேண்டும்.
நல்லிணக்க அடிப்படையில் இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண அதிகாரத் தரப்புகளுக்கு வாய்ப்புத் தரப்பட வேண்டுமே ஒழிய, ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்ற கருத்தை செய்தியாளர் சந்திப்பில் அனைவரும் வலியுறுத்தினர்.



