கோலாலம்பூர், அக்டோபர்-20, ஹோட்டல்களில் நாளொன்றுக்கு குறைந்தது 23 மணி நேரங்கள் வரை வாடிக்கையாளர்கள் தங்கியிருக்க வகை செய்யுமாறு,
ஹோட்டல் நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் அதனை வலியுறுத்தினார்.
23 மணி நேரங்களுக்கு தங்குவதென்பது வெளிநாடுகளில் மிகவும் சகஜமான ஒன்றாகும்.
அதனால் தூய்மைக்கோ தங்குமிட தரத்துக்கோ எவ்வித பாதிப்பும் வருவதில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
அதோடு, வாடிக்கையாளர்களும் தாங்கள் கட்டும் பணத்திற்கு ஈடான சேவை கிடைப்பதாக உணருவர் என்றார் அவர்.
ஹோட்டல்கள் செலவினத்தை மிச்சப்படுத்தி, அதிக இலாமீட்ட நினைப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
ஆனால், அது ஹோட்டல் துறையினரின் இலாபத்தை மட்டுமே உட்படுத்திய விஷயம் அல்ல.
வாடிக்கையாளர்களின் திருப்தியும் முக்கியமென அமைச்சர் சொன்னார்.
தங்குமிட நேரத்தை நீட்டிப்பதில் ஹோட்டல் நடத்துநர்கள் எதிர்நோக்கும் வேலையாட்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண உதவுவதாகவும், டத்தோ ஸ்ரீ தியோங் உறுதியளித்தார்.
சில ஹோட்டல் நடத்துநர்கள் check-in நேரங்களை மாலை 4 மணிக்கும் check-out நேரங்களை காலை 11 மணிக்கும் நிர்ணயித்ததாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அண்மையில் புகார்கள் எழுந்தன.
அந்நடைமுறையானது, குறுகிய காலம் மட்டுமே தங்கியிருக்க அனுமதிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அது நியாயமானதல்ல என வலைத்தளவாசிகளும் அதிருப்தி தெரிவித்தனர்.