
புத்ராஜெயா: வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயன்பாடுகள் மூலம் பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்திய வெளிநாட்டு நபர்கள் தொடர்பான பாலியல் சிண்டிகேட்டை குடிநுழைவுத் துறையினர் முறியடித்துள்ளனர்.
கிள்ளான் மற்றும் புச்சோங் பகுதிகளில் புதன்கிழமை நடத்தப்பட்ட “ஆப்ஸ் கெகார்” (Ops Gegar) எனும் சிறப்பு சோதனையில், மொத்தம் 29 வெளிநாட்டவர்களும் நான்கு உள்ளூர் நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கிள்ளான் நகரிலிருக்கும் விடுதியொன்றில் 19 முதல் 53 வயதுக்குட்பட்ட 13 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் ஐந்து தாய்லாந்து, ஆறு இந்தோனேசியா மற்றும் இரண்டு வியட்நாம் நாட்டவர்கள் அடங்குவர் என்றும் அறியப்படுகின்றது.
மேலும் அங்கிருக்கும் இரண்டு மசாஜ் மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ் மற்றும் சீனாவைச் சேர்ந்த மொத்தம் 16 வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சட்டப்பூர்வ ஆவணமின்றி வேலை பார்த்த இரண்டு இந்தோனேசிய பெண்கள் மற்றும் காவலாளி பணிபுரியும் இரண்டு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் பாலியல் சேவைக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து அவரவர் நாட்டின் அடிப்படையில் 190 ரிங்கிட் முதல் 960 ரிங்கிட் வரை வசூலித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் புத்ராஜெயா குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு, குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.