ஜோகூர் பாரு, அக்டோபர்-11 – ஜோகூரில் வார இறுதி விடுமுறை நாட்கள் மாற்றப்பட்டிப்பது பிடிக்காதவர்கள், தாராளமாக வேறு மாநிலங்களுக்கு மாறிச் செல்லலாம்.
உங்களை யாரும் தடுக்கவில்லையென, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் சற்று கண்டிப்பான தோரணையில் கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை சினமூட்டுவதை விடுத்து, பேசாமல் வெள்ளி-சனிக்கிழமைகளை வார இறுதி விடுப்பு நாளாகக் கொண்ட மாநிலங்களாகப் பார்த்து சென்று விடுங்கள் என, தனது முகநூல் பக்கத்தில் துங்கு இஸ்மாயில் சொன்னார்.
யாரின் பெயரையும் அவர் குறிப்பிடாவிட்டாலும், PKR-ரைச் சேர்ந்த பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிமுக்கான (Hassan Karim) செய்தியாகவே அது பார்க்கப்படுகிறது.
பல்வேறு விஷயங்களில் மிகவும் தைரியமாக குரல் எழுப்புபவர் என அறியப்பட்டவரான ஹசான், வார இறுதி விடுமுறை நாள் மாற்றமானது ஜோகூர் மீண்டும் இங்லீஷ் காலனித்துவத்தைப் பின்பற்றுவது போன்றது எனக் கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமையிலேயே விடுமுறையை நிலை நிறுத்தினால் ஜோகூரின் பொருளாதாரம் ஒன்றும் கெட்டு விடாது என அவர் சொன்னார்.
அவரின் கருத்தை ஜோகூர் பாஸ் தலைவர் Mohd Mazri Yahya-வும் ஆமோத்திருந்தார்.
ஜோகூரில் வார இறுதி விடுமுறை அடுத்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளுக்கே மாறுவதாக துங்கு இஸ்மாயில் முன்னதாக அறிவித்திருந்தார்.