வாஷிங்டனில் நடுவானில் விமானமும் ஹெலிகாப்டரும் மோதல்; யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை

வாஷிங்டன், ஜனவரி-31, அமெரிக்கா, வாஷிங்டனில் நடு வானில் பயணிகள் விமானமும் இராணுவ ஹெலிகாப்டரும் மோதிக் கொண்ட விபத்தில், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை!
வாஷிங்டன் தீயணைப்புத் துறையின் தலைவர் அவ்வாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் மீட்கும் பணிகள் தற்போது சடலங்களைத் தேடும் பணிகளாக மாற்றப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
மோதலுக்குப் பிறகு பயணிகள் விமானம் பனிமூடிய Potomac நதியில் விழுந்து நொறுங்கிய நிலையில், அங்கிருந்து இதுவரை 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட உறைபனியாக இருக்கும் நதியில் சுமார் 300 பேர் பல சவால்களுக்கு மத்தியில் அப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விமானங்கள் மோதிக் கொண்டதற்கான காரணங்கள் இதுவரை தெரிய வரவில்லை.
Kansas நகரிலிருந்து வந்துக் கொண்டிருந்த அந்தப் பயணிகள் விமானம், ரோனல்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக இராணுவ Blackhawk ஹெலிகாப்டருடன் மோதி விழுந்து நொறுங்கியது.
பதைபதைக்க வைக்கும் அக்காட்சிகள் வைரலாகியுள்ளன.