ஷா ஆலாம்,நவம்பர்-28, ஈராண்டுகளுக்கு முன்னர் 16,000 ரிங்கிட்டை லஞ்சப் பணமாகப் பெற்றக் குற்றத்திற்காக போலீஸ் கார்ப்பரல் ஒருவருக்கு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 37 வயது அஸ்ரோல் காலிலை (Azrol Khalil) மேலுமோர் ஆண்டுக்கு சிறையில் அடைக்குமாறு ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை மிரட்டி லஞ்சம் வாங்கியதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர் நம்பகத்தன்மையை இழந்துள்ளார்; இதனால் போலீஸ் சீருடையை அணியவே அவர் தகுதியற்றவராகிறார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
கையூட்டு வாங்கிய போது தனது மேலதிகாரிகளின் பெயர்களையும் பயன்படுத்தி, போலீஸ் படையின் நற்பெயருக்கு அவர் களங்கம் விளைவித்திருப்பதாக அரசு தரப்பு முன்னதாக சுட்டிக் காட்டியிருந்தது.
வர்த்தகக் குற்றம் தொடர்பில் 50 வயது ஆடவர் எதிர்நோக்கியிருந்த விசாரணையை மூடுவதற்காக, அவரிடமிருந்து 16,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை லஞ்சமாகப் பெற்றதாக அஸ்ரோல் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
2022, பிப்ரவரி 7-ம் தேதி பத்து கேவ்ஸ், ஸ்ரீ கோம்பாக், தாமான் பிரிமாவில் உள்ள ஓர் உணவகத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.