
சென்னை, அக்டோபர்-9,
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு, அவரின் தந்தை SA சந்திரசேகரின் ஆதரவும் வழிகாட்டுதலும் மட்டும் இருந்திருந்தால், தற்போது இருப்பதை விட அவர் யானை பலத்துடன் திகழ்வார்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழகச் செயலாளர் கராத்தே தியாகராஜன் அந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.
தந்தை மகன் இருவருக்கும் இடையில் உறவு சுமூகமாக இல்லை என நீண்ட காலமாகவே தகவல் உலா வரும் நிலையில், குமுதம் ரிப்போர்ட்டர் இதழுடனான பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
SAC என சுருக்கமாக அழைக்கப்படும் SA சந்திரசேகர் மூத்த இயக்குநர் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் பரிச்சயமானவர்; அவருக்கு இல்லாத அரசியல் தொடர்பே இல்லை.
இந்நிலையில், தந்தையை விஜய் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வது அவருக்கு அசுர பலத்தை கொடுக்குமென, கராத்தே தியாகராஜன் சொன்னார்.
சிறுவயதிலிருந்து சினிமா பிரவேசம் வரை விஜயை கைப்பிடித்து வழிகாட்டியாக இருந்தவர் SAC….மகனின் சினிமா உச்சத்தைப் பார்த்து விட்ட தந்தைக்கு இனி அரசியலிலும் அதே உச்சத்தைப் பார்க்க ஆசை இருக்காதா என அவர் சொன்னார்.
பழுத்த அனுபவம் கொண்ட SAC கண்டிப்பாக மகனுக்கு அரசியலில் தவறாக வழிகாட்டப் போவதில்லை, எனவே இருவரும் கைகோர்ப்பது விஜயின் அரசியல் வாழ்வுக்கு தான் நல்லது.
இதற்குப் பிறகாவது, குறிப்பாக அண்மைய கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்திற்குப் பிறகாவது அது நடந்தால் சிறப்பு; அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தாம் கருதுவதாகவும் கராத்தே தியாகராஜன் சொன்னார்.
கோடிக்கணக்கான இரசிகர்கள் பின்னால் நிற்க, சினிமா புகழை வைத்து அரசியலில் காலூன்றியிருந்தாலும், அரசியல் அனுபவம் வாய்ந்த எவரும் விஜய் பக்கத்தில் இல்லாதது, அவரின் அரசியல் முன்னேற்றத்திற்கு ஒரு பின்னடைவே எனும் கருத்து நிலவுவதை மறுப்பதற்கில்லை